Friday, January 9, 2015

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.
*******************************************************************************
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணியினர் படித்தாலே பற்றியெரிகின்ற அளவுக்கு சுடுசொற்களைக் கொண்டு சுவரொட்டி ஒன்றை ஒட்டியிருக்கின்றார்கள்.
இது கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய, அருவருப்பான, கேவலமான செயல்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
இந்து முன்னணியினரைப் பற்றியோ அவர்களின் திட்டங்களைப் பற்றியோ தமிழகத்தில் காலூன்றுகின்ற நோக்கத்துடன் அவர்கள் இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காகச் செய்கின்ற முயற்சிகள் பற்றியோ நான் இங்கு பேச வரவில்லை.
என்னுடைய கவலையெல்லாம் இதனை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள விதத்தைப் பற்றித்தான். இதனைப் பகிர்ந்து கொண்டும் இதனைக் கண்டித்தும் பதிவிட்டும் பின்னூட்டமிட்டும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கின்ற முஸ்லிம்களின் வார்த்தைகளில்தான் எத்துணை வன்மம்..! எத்துணை வெறுப்பு!
‘அயோக்கிய நாய்களா!’,‘தைரியம் இல்லாத பொட்டைகளா’, ‘காவி வேசிகளா’‘தே.... பயலுகளா’, ‘காவி நாய்களா’, ‘நேருக்கு நேர் மோத திராணியற்ற பன்றிகள்’ என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.
இதே போன்ற வசைகள்தாம் தோழர் ஆளூர் ஷாநவாஸின் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டவர்களின் வாசகங்களிலும் சில நாள்களுக்கு முன்னால் கண்களில் பட்டது.
முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது. கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
சோகமானது: அண்ணல் நபிகளாரின் அழகிய நடைமுறைகளை அறிந்திராதவர்களாய் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் சோகமானது.
வேடிக்கையானது: அந்தச் சுவரொட்டியை ஈரோட்டின் ஏதோவொரு குறுக்குச் சந்தில் எங்கோ ஒரு மூலையில்தான் ‘அவர்கள்’ ஒட்டியிருக்கின்றார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் அதனை முகநூலில் பதிவிட்டு, பகிர்ந்து, தாம்தூமென்று குதித்து, ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து எல்லோரையும் அந்தச் சுவரொட்டியையும் அதில் இருக்கின்ற வாசகங்களையும் பார்க்கச் செய்து விட்டார்கள். இது எத்துணை அபத்தமான செயல் என்கிற உணர்வும் இவர்களுக்கு இல்லாமல் போயிற்றே.
முட்டாள்தனமானது: இந்து முன்னணியிலும் பரிவார் அமைப்புகளிலும் இருக்கின்ற, சார்ந்து இருக்கின்ற அனைவருமே முஸ்லிம் எதிர்ப்பிலும் ஊறிப்போனவர்கள் அல்லர். உலக இலாபங்களுக்காகவே அந்தக் கூடாரத்தில் ஒதுங்கியிருக்கின்றார்கள். இந்த நிலையில் பொத்தாம் பொதுவாக அவர்களை நோக்கி முஸ்லிம்கள் அள்ளி வீசுகின்ற வசைகளும் சுடுசொற்களும் அவர்களை அந்தக் கூடாரத்திலேயே நிலையாகத் தங்க வைத்துவிடும். இவ்வாறாக முஸ்லிம்களின் இந்தக் கண்மூடித்தனமான எதிர்வினை முஸ்லிம்களுக்கே கேடாக அமையும். இதனை விட முட்டாள்தனமான செயல் வேறு ஒன்றைச் சொல்ல முடியுமா?

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

No comments:

Post a Comment