Friday, January 9, 2015

சிஸ்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் முதுகெலும்பு வளைந்து விடுமாம்!

ஐ.டி நிறுவங்களில் பணிபுரிவோர்களை திடீரென வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள் என்ற குமுறல் கேட்டுக் கொண்டிருக்கிறது. வருத்தம் தான்!
முதலாளிகள் எப்போதும் தங்களுடைய நலனைப் பற்றி தான் யோசிப்பார்கள் என்கிற போது தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி யோசிப்பதற்கு தொழிலாளர்கள் தானே யோசித்திருக்க வேண்டும்.
உண்மையில் ஐ.டி துறைக்கென ஒரு தொழிற்சங்கம் இருக்கிறதா? இயங்குகிறதா? என்பது கூட என்னைப்போலவே பலருக்கும் தெரியாது. அப்படியே இருக்கும் பட்சத்தில் அதை இயங்க விடாமல் தடுப்பதற்கு தான் சகபணியாளர்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி விடுகிறார்களே.
ஏன் வேலையை விட்டு அனுப்புகிறீர்கள் என்று அருகில் இருக்கும் மற்றொருவன் கேட்டால் அவனுடைய வேலையும் போகும் என்று சொல்லத்தான் HR department இருக்கிறதே.
வேலையை விட்டு அனுப்பினால் தானே பிரச்சினை.. நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவன் தலையில் கட்டினால் தானாக மண்டையை பிய்த்து ஓடி விடுவானே என்ற வித்தையும் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.
இதெல்லாம் யாருக்கும் நிச்சயமாக புதிது அல்ல. நிச்சயம் எல்லாரும் அறிந்தது தான். இனி வரும் காலமாவது கை கோர்த்து வேண்டியவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். முப்பது நாட்கள் வருந்தி ஒன்றாம் தேதி பாங்க் பாலன்ஸ் பார்த்து மகிழ்ச்சி அடையாதீர்கள்.
இன்னொரு விஷயத்தையும் கவனம் கொள்ள வேண்டும். இப்படி ஒரு recession period போல் போங்கு காட்டி அரசாங்கத்திடம் பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் சலுகைகளை எதிர்பார்க்கின்றதா? அல்லது அரசாங்கமே வேலையின்மையை காரணம் காட்டி இன்னும் சில பன்னாட்டு நிறுவனத்திற்கு கதவைத் திறந்து விட நாடகமாடுகிறதா என்பதையும் உற்று நோக்க வேண்டும்.
எது எப்படியோ நம்மிடம் ஒற்றுமையும் போராட்ட குணமும் இல்லாத போது எல்லாமே அவர்களுக்கு சாதகம் தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
சிஸ்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் முதுகெலும்பு வளைந்து விடுமாம்!

நன்றி : சகோதரர் விக்னேஷ் பாண்டிதுரை 

No comments:

Post a Comment