Friday, January 9, 2015

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்
********************************************
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவிக்கின்றார்:
அண்ணல் நபிகளார்(ஸல்) என்னுடைய தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னார்: ‘இந்த உலகத்தில் ஒரு பயணியைப் போன்று அல்லது வழிப்போக்கரைப் போன்று வாழுங்கள்’
நூல் :புகாரி
ஆம். இந்த உலகத்தில் மனிதனின் உண்மையான அந்தஸ்து ஒரு பயணியைப் போன்றதுதான். ஏதோ இங்கேயே காலமெல்லாம் வாழப்போகின்றோம் என்கிற நினைப்புடன் அவன் இந்த உலகத்தில் வாழக்கூடாது. அதற்கு மாறாக இந்த உலகத்தில் அவன் ஒரு பயணியைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு பயணியும் அந்நிய மண்ணில் தன்னுடைய மனத்தைத் தொலைப்பதில்லை. அந்நிய நிலத்தில் அவன் பயணித்துக்கொண்டிருக்கின்ற அந்த வேளையிலும் அவனுடைய மனம் அவனுடைய பிறந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும்.
முற்றிலும் இதைப் போன்றே ஒவ்வொரு மனிதரும் மறுமையின் இல்லத்தில் தம்முடைய மனத்தைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். மறுமைதான் தம்முடைய நிலையான வசிப்பிடமாக இருக்கின்றது என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை முழுக்க முழுக்க அந்நிய நிலமாக நினைக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் அதற்கும் ஒரு படிமேலாக எந்த ஊரிலும் நிலையாக வாழாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிகின்ற, எல்லா நாள்களிலும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற நாடோடியைப் போன்றே இந்த உலகில் வாழ முற்பட வேண்டும்.
இந்த மனநிலையுடன் மனிதன் வாழத் தொடங்கினால் அவனை அவனுடைய உண்மையான நோக்கத்திலிருந்து இந்த உலகத்தால் திசை திருப்பவே இயலாது. மோகம், பேராசை போன்றவற்றாலும் அவனை நேர்வழியிலிருந்து விலக்க முடியாது.

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

No comments:

Post a Comment