Friday, January 9, 2015

ஐடி நிறுவனங்கள் - வேலைவாய்ப்பு தற்போதைய சூழல் - சகோதரர் விநாயக முருகன்

ஐடி நிறுவனங்களின் ஆட்குறைப்பு விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஐடி நண்பர்கள் பலரின் ஆலோசனைகளை பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் இந்த ஐடி தொழில் இல்லாவிட்டால் என்ன செய்வீங்க என்று கேட்டால் ஒருக்கணம் திகைத்து நிற்பதை பார்த்துள்ளேன். பெரும்பாலும் கல்லூரி கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேறி மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு வருபவர்கள் முதல் மாதம் சுளையாக இருபதாயிரம், முப்பதாயிரம் என்று வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் சாம்சங் கேலக்ஸியும், டெர்பி, லீ ஜீன்சுகளுமாய் வாங்கி குவிப்பார்கள். நடுத்தர வயதினர் இஎம்ஐக்களில் கார்,வீடு வாங்கி சம்பளத்தில் முக்கால்வாசியை கடன் கட்டிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் கடன் வாங்காமல் வீடு,கார் வாங்க முடியாது என்பது நிதர்சனம் என்றாலும் என்னைக்கேட்டால் சம்பளத்தில் இருபது சதவீதத்துக்கு குறைவாக கடன் வாங்கினால் நல்லது என்பேன். எந்த தொழில் செய்தாலும் பதினெட்டு மாதங்கள் சம்பளத்தை கையில் சேமிப்பாக வைத்திருக்கவும் என்று வாரன் பபெட் சொல்வார்..
சைக்கிளில் சென்று பேப்பர் விநியோகம் செய்தது, ஊரில் அம்மா நடத்திய இட்லிக்கடையில் வேலை, பிறகு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலை, பத்திரிக்கையில் உதவி ஆசிரியர், மார்கெட்டிங் ரெப், பத்திரிக்கையில் ப்ரீலான்சர் என்று பல வேலைகளை செய்தபிறகே ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவன் நான். ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும்போது இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் சம்பளத்துடன் புதிய வேலை வரும்.மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும்போது அந்த வேலை பிடிக்காமல் திடீரென ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்ப்பேன். நான்கைந்து ஐடி நிறுவனங்கள் மாறி அலைந்துவிட்டேன். இப்போது இருக்கும் வேலை பறிபோய் ஒரு பத்திரிக்கை வேலையோ அல்லது வேறு ஒரு தொழிலோ செய்யும் பட்சத்தில் நான் கெளரவம் பார்க்காமல் அதை செய்வேன். எனது தேவைகள் மிக குறைவு. சிக்கல்கள் அதிகம் இல்லாமல் மிக எளிமையாக வாழ பழகிவிட்டேன். பெரியளவில் கடன் இல்லை. பெரியளவில் சேமிப்பும் இல்லை. ஒரு குழந்தையோடு போதுமென்று நிறுத்திவிட்டேன். எனது உணவுபழக்கமும் மிக எளிமையானவை. இந்த விஷயத்தில் மலையாளிகளை எனக்கு பிடிக்கும். எந்த சூழலிலும் வாழ பழகியவர்களை வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதாக தண்டித்து விடாது என்று உறுதியாக நம்புவன். சிக்கனத்தை, சேமிப்பை, எளிமையை கொண்டாடியவர்கள் தமிழர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. தவிர வேலை இழப்பு என்பது வருத்தமான விஷயம் என்றாலும் வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுவதில்லையே. ஆடம்பரம் மேற்கத்திய வாழ்க்கையிடமிருந்து நாம் கற்றது. போலிக்கெளரவம் நமது ரத்தத்திலேயே ஊறியது. இந்த இரண்டுமே நவீன வாழ்க்கையின் சிக்கல்கள்.

நன்றி : சகோதரர் விநாயக முருகன்

No comments:

Post a Comment