Friday, January 9, 2015

டி எம் கிருஷ்ணாவின் கவனத்திற்கு....


டி எம் கிருஷ்ணாவின் கவனத்திற்கு....
*****************************************************
புகழ்பெற்ற மேடை பாடகர் டி எம் கிருஷ்ணா இன்றைய தி இந்து நாளிதழில் பிரெஞ்சு கார்ட்டூனிஸ்ட்களின் படுகொலைகளின் பின்னணியில் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கின்றார்.
அதில் உலகெங்கும் நடக்கின்ற பயங்கரவாதச் செயல்களை முஸ்லிம் தலைவர்கள் கண்டிப்பதில்லையே ஏன்? என்று அதிகமாக வருத்தப்பட்டிருக்கின்றார். அவருடைய இந்தக் கவலையும் அக்கறையும் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவையாகும். இந்திய முஸ்லிம்கள் பற்றிய ஒரு தவறான புரிதல் ஊடகம் மூலமாக உருவாக்கப்பட்டு அது எந்த அளவுக்குப் பேருருவம் எடுத்திருக்கின்றது என்பதற்கு டி எம் கிருஷ்ணா அவர்களின் ஆதங்கமே சான்று.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் இது போன்ற தவறான புரிதலுக்கு ஆளாகியிருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
முதலாவதாக ஊடகம். முஸ்லிம்களை வில்லன்களாகச் சித்திரிப்பதில் திரைப்படங்கள் முதல் செய்தித்தாள்கள் வரை, தொலைக்காட்சி விவாதங்கள் முதல் இணைய அரட்டைகள் வரை முழு மூச்சுடன் இயங்கி வருகின்றன.
ஒரே ஒரு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு, சில நாள்களுக்கு முன்னால் நடந்த பெங்களுர் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதத்தைச் சொல்லலாம். குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்று ஒரு ட்விட்டர் செய்தி வருகின்றது. முஸ்லிம் தீவிரவாதி மிரட்டல் என்று ஊடகங்கள் அலறின.
அடுத்த நாளே அது முஸ்லிம் பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் மிரட்டலை வெளியிட்டது முஸ்லிம் அல்ல, ஒரு இந்து பொறியியல் மாணவர் என்கிற உண்மை வெளிப்படுகின்றது. இதனை ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன, நினைவிருக்கின்றதா? மன நிலை பாதிக்கப்பட்ட இந்து விடுத்த மிரட்டல் என்றே ஊடகங்கள் அடக்கி வாசித்தன.
இரண்டாவதாக, இஸ்லாத்தின் பெயரால் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்ற கொடூரங்களுக்கும் கொடுமைகளுக்கும் வரம்பு மீறல்களுக்கும் கொலைகளுக்கும் இஸ்லாத்துடனும் முஸ்லிம்களுடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே உலகெங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பொதுவான முஸ்லிம்களும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்களின் இந்தக் கண்டனங்களும் அறிக்கைகளும் விளக்கங்களும் ஊடகத்தில் வெளியிடப்படுவதே இல்லை.
ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் உண்மை மறைந்து போய்விடுமா, என்ன? முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அமைதியை விரும்புகின்றார்கள், எந்த அளவுக்கு பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரானவர்கள் என்பதை அரசு அதிகாரிகள் பலரும் நேரடியாக உணர்ந்திருக்கின்றார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் சொல்வேன். இப்போது நம் நாட்டின் பிரதம பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்ற அஜித் டோவல் அவர்களின் கூற்று. அவர் சொல்கின்றார்: ’மதவாதக் கோணத்தில் பயங்கரவாதப் பிரச்னையை அணுகுவதை நாம் கைவிட வேண்டும். எந்தவொரு இந்து அமைப்பைக் காட்டிலும் முஸ்லிம்கள்தாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நமக்குத் துணை நிற்கின்றார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டனத்தையோ தீர்ப்பையோ வெளியிட்ட ஒரே ஒரு இந்து அமைப்பை எனக்குச் சுட்டிக்காட்டுங்களேன்.’
இந்த வீடியோ இணைப்பை இங்கு இணைத்துள்ளேன். சரியாக 54:40 நேரத்தில் அவருடைய இந்த வாசகங்களைக் கேளுங்கள்.
ஆனால் இந்தப் புரிதலும் தெளிவும் பொதுவான நாட்டு குடிமக்கள் வரைக் கொண்டு செல்லப்படவில்லை என்பதுதான் வேதனை.
மூன்றாவதாக, அரசியல் நோக்கங்களுக்காக முஸ்லிம் நாடுகளும் இளைஞர்களும் பகடைக் காய்களாய் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு நாடுகளின் உளவுத் துறைகள் கூலிப்படையினரை வைத்துக்கொண்டு இந்தப் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த உளவுத்துறையினருக்குக் வரையறை இல்லாத பணமும் சுதந்திரமும் தரப்படுகின்றன. இவர்களின் செயல்பாடுகள் எந்தத் தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. அரசியல் தலைவர்களைக் கொல்வது முதல் பயங்கரவாத ஏஜென்ட்களை உருவாக்குவது வரை இவை முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. ஒரே ஒரு எடுத்துக்காட்டாக இன்று உலகம் முழுவதும் மிகப் பெரும் பயங்கரவாதி எனப் பேர் பெற்றிருக்கின்ற உஸாமா பின் லாதீனைச் சொல்லலாம். இந்த உஸாமாவுக்குப் பணமும் பயிற்சியும் நெட்வர்க்கும் வசதியும் களமும் செய்து கொடுத்தது சிஐஏ என்கிற உளவுத்துறைதான். ஆக இந்த உளவுத் துறை ஏஜென்சிகள் ஏதேனும் ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படாத வரை இந்த அவலங்கள் தொடரும் என்பதுதான் உண்மை.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் பிரச்னையின் இந்த மூன்று பரிமாணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான்.
நன்றி : சகோதரர்  டி, அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
டி எம் கிருஷ்ணாவின் கட்டுரை இணைப்பு
http://tamil.thehindu.com/…/%E0%AE%87%E…/article6766998.ece…
பிரதம பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் கூற்று காணொளி இணைப்பு.: (சரியாக 54:40 நேரத்தில் பார்க்க.)

No comments:

Post a Comment