Friday, January 9, 2015

விமானம் கண்டுபிடித்தது இந்தியர்கள் 7000 ஆண்டுக்கு முன்பு - மாறுபட்ட அலசல்

புராண காலத்திலேயே 
விமானம் இருந்ததாகவும் அதை இந்துக்கள் கண்டு பிடித்ததாகவும் காவிகள் சொல்கிறார்கள்.
சொல்லட்டும் !

இவர்கள் சொல்வது மாதிரியல்ல...
இன்னும் கொஞ்சம் அட்வான்சா சொல்லணும் .

இந்த விமானம் 
புஷ்பக விமானம். எல்லாம் 
இந்த காவிகள் சொல்ற புராண காலத்துக்கு முன்னாலேயே இருக்கு.

ஆயிரத்து ஒரு அரபுக் கதைகள்
ஹாத்திம்தாய் கதைகள் 
நாம்படித்ததில்லையா ?

அலிபாபாவும் 40 திருடர்களும் கதையில்
" அண்டாகா கசம் அபுல் ஹுகும் திறந்திடும் ஷீஷே " ன்னு பாஸ்வேர்டை கண்டு பிடிச்சவனே சாயிபுதான்.

உண்மையில் இவங்க சொல்ற புராணகாலத்துக்கு முன்னாலேயே
விமானத்தையும் கண்டு பிடித்தவர்கள் முஸ்லிம்கள்தான்.

கொஞ்சம் விளக்கமா சொல்றேன் !
நம்ம சிந்துபாத் இருக்காரே ...
எத்தனை ஆயிரம் வருஷத்துக்கு முன்னால வாழ்ந்த ஆளு !
ராமரு 
கிருஷ்ணரு 
இவங்களுக்கெல்லாம்
ரொம்ப ரொம்ப மூத்த தலைமுறை ஆளு.
தந்திகாரன்கிட்ட கேட்டா கரெக்டா சொல்வான்.

அந்த சிந்துபாத் அப்பவே பறக்கும் கம்பளத்தில பறந்து சாதனை படைத்த ஆளாக்கும்.
அவருக்கு வில்லன் யாரு தெரியுமா ?
மந்திரவாதி மூசா.
அவன் படுபயங்கரமான விஞ்ஞானி .

மரம் மலை இலை எல்லாத்தையும் அந்த ஆளு பறக்க வச்சிருக்கான்.
ஏழு கடல் ஏழுமலை எல்லாத்தையும் பார்த்த ஆளு சிந்துபாத்.
அட கடலுக்குள்ள போயி கடல்கன்னிகளையே
கலாய்சுட்டு வந்த ஆளு அவரு.
அது மட்டுமா ?
பாதாள உலகத்திலும் பாய்ஞ்சு போயி சாகசம் பண்ணியிருக்காரு.

இந்த மூசா இருக்காரே ...
அப்பவே நானோ விஞ்ஞானி .
சிந்துபாத்தின் காதலி அஞ்சரை அடி உயர லைலாவை அரை அடியா சின்னதாக்கி வெற்றிலை பெட்டியில அடச்சுருவாரு.
அது என்ன சாதாரண விஞ்ஞானமா ?
ஸ்கூலுக்கு போற சின்ன பாப்பாங்க வாட்டர்பேக்கை தோளில் போட்டுட்டு போற மாதிரி சிந்துபாத் லைலா இருக்கிற பொட்டியை தோளில் போட்டுட்டு ஓடுவாரு சாடுவாரு குதிப்பாரு பறப்பாரு .. எல்லாம் செய்வாரு .




அது மட்டுமில்லே ..
அப்பவே கிளிக்கு உடல்ல யானையின் உசுரையே அடச்சு வச்சு அசுரத்தனமான சாதனையெல்லாம் பண்ணியிருக்காரு மூசா.
யானைத்தலை ஆப்பரேசனுக்கு முன்னாலே
உயிர்மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் முஸ்லிம் மூசா.

உண்மயைச் சொன்னா நூறு பாரத ரத்னா அவார்டு சிந்துபாத்துக்கும் மூசாவுக்கும்தான் கொடுக்கணும்.
ஆனா கொடுக்கமாட்டாங்க.
ஏன்னா...
சிந்துபாத்
மூசா
ஹாத்திம்தாய்
இவங்கல்லாம் முஸ்லிம்கள் .

அவங்க கொடுக்கலன்னாலும் ஒண்ணும் கெட்டு போயிடாது. நாம கொடுப்போம்.
நவீன விஞ்ஞானத்தின் பிதாமகன்கள்
சிந்துபாத்தும்
மூசாவும்
ஹாத்திம்தாயும்தான்.

வரலாறு எழுதியாச்சு
காப்பாற்ற வேண்டியது உங்க பொறுப்பு...

நன்றி : சகோதரர் அபு ஹாஷிமா 

ஆக்கபூர்வமான படிப்பு

இளைஞர் பட்டாளமே ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடு. ஆக்கம் ஒன்றே ஊக்கம் தரும் . நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட நீங்கள் நாட்டுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற தொலைநோக்குடன் செயல்படுங்கள். உங்கள் கைகளில் நாளைய இந்தியா . 



ஏதேனும் தொழில் பழகுங்கள் அதிக ஊதியம் பெற்று தரும் வேலை கணினி / மென்பொருள் சார்ந்த துறையே என்கிற சிந்தனை மாயை உங்களை இந்த சிந்தனை உலோபி ஆக்கிவிடும் . சிந்தித்திடு / செயல்படு இன்றே செய் அதனை நன்றே செய் . உன்னால் முடியும் தோழா

மாற்றம்

மாற்று அரசியல் / மாற்று விவசாயம் / மாற்று பொருளாதாரம் / மாற்று சிந்தனை பற்றி மட்டுமே பேசிகொண்டிருந்த நாம் இன்று மாற்று தொழில் / மாற்று வேலைவாய்ப்பு பற்றி சிந்திக்க பேச வேண்டிய தருணம் இது . நிலையில்லா தொழிலை சார்ந்து அதனில் மட்டும் திறமை வளர்த்து கொண்ட நாம் மற்றதை புறக்கணிப்பது ஏனோ ? சிந்தியுங்கள் / செயல்படுங்கள் எழுச்சி பெறுவீர் வென்றிடுவீர் .
மாற்றம் ஒன்றே நிலையானது.

எதில் மகிழ்ச்சி!!!

எதில் மகிழ்ச்சி!!!
ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

நாளை அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..!! 
டிஸ்கி : படித்ததில் பிடித்தது 

கோமாளிகளின் கோணங்கித்தனம்..! - வேஷ்டி தினம் ஓர் பார்வை

கோமாளிகளின் கோணங்கித்தனம்..!
“டேய் வேட்டி கட்டிய பயலயெல்லாம் கீழே உக்கார வைடா. பேண்ட்,கோட் போட்டவனை எல்லாம் சேர்ல உக்கார வைடா!”
இந்த வரிகள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ரத்தக் கண்ணீர் படத்தில் சொல்லப்பட்ட வசனம். எம்.ஆர்.ராதா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் இன்றையச் சட்டவிதி நடைமுறையை நையாண்டி செய்து இருக்கிறார்.
வேட்டி என்பது கலாச்சாரச் சின்னம். பண்பாட்டு வெளிப்பாடு, தனிமனித சுதந்திரம், இதைத் தடுப்பது தவறு என்றெல்லாம் இன்றையச் சட்டமன்றத்தில்கூட விளக்கமும் எதிர்ப்பும் தரப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் கிளப்பில், அவர்களுக்குள்ள உரிமையில், வேட்டி கட்டிய மனிதர்களுக்குக் கிளப்புக்குள் இடமில்லை என்று விதிவகுத்துக் கொண்டார்கள். இந்த விதியால் இன்றைக்குப் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்.
கிரிக்கெட் கிளப்புக்குள் வேட்டி அணிந்து வந்த இவர்களை கிளப்பின் சட்டவிதியைக் காட்டி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
சட்டத்தின் காவலர்கள், கிளப்பின் இந்த சட்டவிதிக்கு மரியாதைக் கொடுத்து திரும்ப வந்துவிட்டார்கள்.
ஆனால் இந்தச் செயல், சட்டத்துறைக்கே நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான அவச்செயல்.
வேட்டி, கலாச்சார சின்னம், பண்பாட்டு அடையாளம் என்று மட்டும் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மனிதக் கலாச்சாரத்தின் முதல் கலாச்சாரம் அம்மண நிலைதான். அடுத்தடுத்த வளர்ச்சியில் இலை, தளை ஆடைதான் கலாச்சார சின்னம். அதற்கும் அடுத்தடுத்த நிலையில் விலங்குத் தோல். அதற்கும் அடுத்த நிலையில் துணி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதிலும் வேட்டி அல்ல, கோமணம்தான். அதற்குப் பின் வேட்டி வந்தது.
இந்த அடிப்படையில் பார்த்தால் ஆடைக் கலாச்சாரம் என்பது ஒரு நிரந்திர அடையாளம் அல்ல. காலத்துக்கு காலம் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒன்றுதான்.
வேட்டிக்கும் இந்த வரலாறு பொருந்தும்.
கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்று இருக்கும் ஆடை அவமதிப்பு நிகழ்ச்சியை ஒரு கலாச்சார அவமதிப்பு என்று சுருக்கிப் பார்க்க வேண்டாம்.
அதையும் தாண்டி மிகவும் கேவலமான , கொடூரமான தீண்டாமை அவமதிப்பு இந்த நிகழ்வில் இருக்கிறது.
வேட்டி என்ற ஒரு ஆடையை எதனால் கிரிக்கெட் கிளப் தவிர்த்து இருக்கிறது என்ற காரணம் ஆராயப்பட வேண்டும்.
பொதுவாக மேல்தட்டு வர்க்கம், மேட்டிமைச் சமுதாயம், செல்வப் பிரதிநிதிகள், கற்று அறிந்தவர்கள் வேட்டியை ஒரு அவமானச் சின்னமாகப் புறமொதுக்கி விட்டார்கள்.
வேட்டி என்பது பாமரர்களின், பட்டிக்காட்டான்களின், தாழ்நிலைச் சமுதாயத்தவரின் அடையாளமாக மாறிவிட்டதாகச் சமூக நிலையின் எண்ணப் பிரதிபலிப்பு இருக்கிறது.
இந்த உண்மையின் அடிப்படையில்தான் வேட்டிக்குக் கீழ்நிலைப் படித்தரம் வந்து இருக்கிறது.
கிரிக்கெட் என்பது மேல்தர வர்க்கத்தின் விளையாட்டு. அவர்களுக்குரிய கிளப்பில் உயர் வகுப்பினர்தான் பங்கு கொள்ள வேண்டும். உயர் வகுப்பினரின் அடையாளம், கலாச்சாரம் மேலை நாட்டு உடை அலங்காரம் என்று தீர்மானிக்கப் பட்டுவிட்டது.
அதாவது அவர்கள் மேலானவர்கள். உயர் வகுப்பினர்கள். வேட்டி கட்டியவர்கள் தாழ்வானவர்கள். கீழ்தரமானவர்கள் என்ற சாதீய குணம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்தச் செயல் தீண்டாமைக் குற்றத்திற்குரிய தகுதி பெற்று இருக்கிறது. இந்தத் தீண்டாமை மேல் வர்க்க அறிவு ஜீவிகளான உயர்ந்தவர்களையே வேட்டி கட்டிய காரணத்தினால் கீழ்ச்சாதியாக மாற்றிவிட்ட்து.
தீண்டாமைக் குற்றம் நீதிமனிதர்களையே தீண்டி இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டின் போது தேசியக் கொடியை உடலில் கண்ட இடத்திலும் வரைந்து கொண்டு தேசப் பற்றைக் காட்டும் கோமாளித்தனமான முட்டாள்களை ரசிகப் பெருமக்கள் எனப் பிதற்றித் திரியும் கிரிக்கெட் வாரியம், வேட்டி அணிதலைக் கொச்சத்தனமானது என்று குறிக்கிற தைரியம் எங்கிருந்து வந்தது? தேசியக் கொடி அதன் தரம் தாழ்ந்து அவமானப் படுத்தப் பட்டிருக்கிறது. எந்த நீதிமன்றமும் இதுபற்றி இதுவரை கருத்துக் கூறியதில்லை.
கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் குத்தாட்டத்தில் தேசியக் கொடிக்குள்ள சட்டவிதி பேணப் பட்டிருக்கிறதா? ஆனால் கிரிக்கெட் கிளப்பின் சட்டவிதி நீதிவான்களுக்கே இப்பொழுது நடைமுறையாக்கப்பட்டு இருக்கிறது.
பதினொரு முட்டாள்களின் ஆட்டத்தைப் பல ஆயிரம் மக்கள் ரசிக்கும் முட்டாள்தனத்திற்குப் பேத்தனமான ஆதரவு தந்ததின் காரணத்தால் இந்தப் பித்தாலாட்டங்கள் நடைமுறைப்படுகின்றன.
இந்த விளையாட்டை அரசியல் மேதைகளும் கல்வி மகான்களும் தங்கள் வேலையைப் புறம் ஒதுக்கிவிட்டு வந்து ரசித்த வீணத்தனத்தின் விபரீதம் இப்பொழுது விளையாடி இருக்கிறது.
இந்த வாரியத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பேன்ற மாண்புமிகுகள் இருக்கின்ற மோசமான விளைவும் சூதாட்டமாக மாறி மக்களை ஏளனப் படுத்துகிறது. தனிச்சட்டம் அமைத்து தீண்டாமையை முன்னிலைப் படுத்துகிறது.
நீதிமன்றங்கள், ஆட்சி அதிகாரங்கள் விழிப்படைய வேண்டும். இந்த வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள், ஒதுக்கப்படும் இடங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்தினுடைய வெளிவடிவம்தான்.
இதற்கு மேலும் பண்பாடு, கலாச்சாரம் என்று ஒரு குறுகிய எல்லைக்குள் இதைக் கொண்டு போய் நிறுத்தாமல் இது ஒரு ஒட்டு மொத்த சமூக அவலம் என்ற தீர்மானத்தில் இறங்கி மக்கள் சக்தி முன்னெழுந்து வரவேண்டும்.
தேசத்தந்தை காந்தியடிகள் இன்றைய கிரிக்கெட் கிளப்புக்குள் போக முடியாது. ஏனென்றால் வேட்டியைத் தவிர வேறு ஆடைகளை அவர் முற்றிலுமாக துறந்தவர்.
இதுதான் தக்க தருணம். இதுதான் நேர்மைக்கு நாம் உறுதி சேர்க்க வேண்டிய உன்னத வாய்ப்புக் காலம்.

நன்றி : சகோதரர்  ஹிலால் முஸ்தபா சென்னை 

தீவிரவாதி பாய்ஸ் ஒரு நிமிடம்

தீவிரவாதி பாய்ஸ் ஒரு நிமிடம்
நில்லுங்க! மத பெயரை வைத்து
மனிதர்களை போட்டுத் தள்றீங்க!
சரி அது ஒங்க விருப்பம்!

நாங்க சொன்னா கேக்கவா போறீங்க!
துப்பாக்கியை எங்க பக்கம் திருப்பிடுவீங்க!
ஆனால் ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்ங்க!  உங்கள் வேலை முடிந்தவுடன்
ஏன் ஒடி ஒளிஞ்சிடறீங்க!
உலக முஸ்லீம்கள் அனைவரும் ஒரே மைதானத்தில் ஒன்று கூடி ஆட்களை தேர்வு செய்து சென்று வா! வென்று
வா மகனே சாரி கொன்று வா மகனே ! அப்படின்னு அனுப்பிய மாதிரி அனைத்து
முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்! நீங்கள்லாம் யாரு! எங்கேருந்து வர்றீங்கன்னே எங்களுக்கு
தெரியாதே!
நீங்கள்லாம் தைரியமானவர்கள்
என்றும் துணிச்சல்காரர்கள் என்றும் உலகம் நம்புதே! அப்புறம் ஏன் ஓடி
ஒளியறீங்க! நின்று தைரியமாக உங்கள் முகங்களை காட்டி, இன்ன காரணத்துக்காக இதை செய்தேன் என்று சொல்லுங்கள்!உங்களின் பூர்வீகம் என்ன! உங்கள் பின்னணி என்ன சொல்லுங்களேன்!
உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால் உலக மக்கள் அதை உணரட்டுமே!
நீங்க முகத்தை மறைச்சிடறீங்க!
உலகம் உங்க அடையாளத்தை எங்கள் ஒவ்வொருவர் முகத்திலும் பொருத்தி
பார்க்குதே!



நன்றி :  சகோதரர் முஹம்மத் ரபியுதீன் - பாரிஸ் பிரான்ஸ் 

புகைப்படம் ஏற்படுத்திய பரவசம்

வாழ்கையில் மறக்கமுடியாத சில தருணங்கள் / புகைப்படங்கள் இருப்பதுண்டு அறிந்தோ அறியாமலோ அதனை பாதுகாக்கிறோம். அந்த புகைப்படங்கள் வாழ்வில் இனிய /மறக்கமுடியாத தருணங்களை பிரதிபலிக்கும். அந்த புகைப்படங்கள் நமது கற்பனை குதிரையை சிறகடித்து ஓடவிடும் .



நான் சமீபத்தில் அண்ணன் முஹம்மத் ரபியுதீன் அவர்களின் படத்தை பற்றி கருத்து சொன்ன பொழுது அவர்களது எழுத்தையும் அவர்களின் கடமை பற்றியும் எழுதினேன் நகைச்சுவையுடன் தனது கருத்தை நேர்த்தியாக மிக ஆழமாக மனம் புண்படா வண்ணம் எடுத்துரைக்கும் அவரது பாணி தனி. அவர்களின் புகைப்படம் பற்றி நான் கருத்துரைத்த போது அது அவருக்கு சிலவற்றை ஞாபகம் ஊட்டுவதாகவும் அந்த புகைப்படம் அவர்களுக்கு மிகவும் பிடித்தது மனதிற்கு உகப்பானது என்றும் குறிப்பிட்டார்.




யான் அறியேன் அன்று அப்படி ஒரு தருணம் எனக்கும் அருகாமையில் உள்ளது என்று அந்த தருணத்தை எனக்கு நேற்று ஏற்படுத்தி தந்தவர் ஜனாப் இக்வான் அமீர் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை நான் ஒளியூட்டி தருமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன் அதை உடனே செய்து தந்தார் சிறிது நேரம் கழித்து அந்த புகைபடத்தை மேலும் மெருகூட்டி இரண்டு தினத்தில் உங்களுக்கு பரிசளிப்பேன் என்று கூறினார் . 


இது வரை நாங்கள் சந்தித்தது இல்லை, பேசியது இல்லை, முகநூல் நட்பு மட்டுமே. நேற்றிரவு எனக்கு அந்த புகைபடம் அனுப்பி தந்தார்/ பரிசளித்தார் எனது வாழ்வின் 



ஓர் மறக்க முடியாத தருணம் அது .அவர்களது மகள் சகோதரி மரியம் இக்வான் அமீர் அவர்களின் இரண்டு நாள் கடின உழைப்பு அந்த புகைபடத்தில் பிரதிபலித்தது . மனதிற்கினிய நினைவுகள் சிலவற்றை நினைவுபடுத்தும் அந்த புகைப்படம் எனது வாழ்விலும் நடந்தது சகோதரர் முஹம்மத் ரபியுதீன் சொன்ன அந்த சிறப்பான தருணத்தை நானும் அனுபவித்தேன் . எனது கண்களில் ஆனந்த கண்ணீர் இப்படியும் ஒரு நட்பினை எனக்கு தந்தருளிய ஏக இறைவனுக்கே அனைத்து புகழும்.